UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:35 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு இரு பாலர் மேல்நிலைப்பள்ளியில், 900 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கழிப்பறையில் ஒரு ஜாதி குறித்து மற்றொரு ஜாதி மாணவர்கள் அவதுாறாக எழுதியிருந்தனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்டனர். இருவர் காயமுற்றனர்.
இரு தரப்பு மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்களை அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள் முன் போலீசார் பேச்சு நடத்தினர். மேலும், 16 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இப்பள்ளியில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என, கடந்த மாதம், மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஜாதி மோதல் நடப்பதால், ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, கங்கைகொண்டான் உட்பட ஏழு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் முதல் தலைமை ஆசிரியர் வரை ஒட்டுமொத்தமாக கூண்டோடு மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருந்தது.
இதில், வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இப்பள்ளி தலைமை ஆசிரியையும் இடமாற்றம் செய்யப்பட்டார். எனினும் அமலுக்கு வரவில்லை. சபாநாயகர் அப்பாவுவிடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்ததால், அந்த மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.