UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:37 AM

தடகள வீராங்கனை, கதை சொல்லி, ஓவியர், இசைக் கலைஞர் என பன்முகத் திறமைக்கு சொந்தக்காரரான ஹரிதா முத்தரசன்: நான் பிறந்தது சென்னையாக இருந்தாலும், வளர்ந்தது, ஸ்கூல் படித்தது கடலுார் தான். சிறு வயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம். அம்மாவுக்கு ஆரம்பத்தில் இது பிடிக்கவில்லை. விளையாட்டு படிப்பை கெடுத்து விடும் என நினைத்தனர்.
ஆனால், ஷூ வாங்க முடியாத பொருளாதார சூழலிலும் வெறும் காலில் ஓடி, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலில் வந்து பதக்கம் வாங்கினேன்; அது வீட்டில் அனைவரையும் சந்தோஷப்படுத்தியது.
அப்புறம் ஸ்போர்ட்ஸ் வேண்டாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். அப்படியே தொடர்ந்து, மாவட்ட, மாநில அளவில் பல பதக்கங்கள் ஜெயித்தேன்.
அதனால், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சென்னையில் இருக்கிற பிரபல கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்க சுலபமாக இடம் கிடைத்தது. பெண்கள் சுதந்திரமாக இருக்க கல்வியும், வேலைவாய்ப்பும் முக்கியம் என்று அடிக்கடி சொல்லி, என்னை ஊக்கப்படுத்தினர்.
'தடகள துறையிலிருந்து விலகி திரைத்துறைக்கு ஏன் வந்தே'ன்னு சிலர் எளிதா கேட்பாங்க. 10 ஆண்டுகளுக்கு முன் 100 மீட்டர் துாரத்தை, 13 செகண்டில் ஓடிய பெண் தான்; என்னால் எப்படி அதை சுலபமாக விட்டுட்டு வர முடியும்; சமூக சூழ்நிலை தான் நான் ரொம்ப நேசிச்ச விஷயத்தை விட்டு வெளியே வர வைத்தது. 2017ல் மாடலிங் துறையில் வாய்ப்பு வர, அதை பயன்படுத்தி இரண்டாவது இன்னிங்சை துவங்கினேன்.
ஏழு ஆண்டுகளில் இதுவரை, 43 படங்களில் நடித்திருக்கிறேன். சிறு வயது முதலே ஓவியத்திலும் ஆர்வம் அதிகம். இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பலர் விரும்பி வாங்குகின்றனர். மேலும், கதைசொல்லியாகவும் பரிணமித்து, பல பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு சென்று கதைகளை சொல்லி வருகிறேன்.
ஏற்கனவே இருக்கிற தவறான பார்வைகளை மாற்றி, புதிதான கண்ணோட்டத்தை கொடுப்பதே என் கதைகளின் வேலை. மேலும், இசையிலும் அதே மாதிரியான புது முயற்சியை கையில் எடுத்துள்ளேன்.
முதன்முதலாக, களிம்பா என்ற ஆப்ரிக்கன் இசைக்கருவியை வாங்கினேன். முழுக்க முழுக்க இரும்பில் செய்யப்பட்ட பியானோ மாதிரியான கருவி அது. அதிலிருந்து வந்த இசை மிகவும் மன அமைதியை தந்தது.
அதற்கு பின் தான் சவுண்ட் ஹீலிங் முறையை மற்றவர்கள் முன் செய்ய ஆரம்பித்தேன். ஒரு சில நாடகங்களுக்கு லைவ் மியூசிக்கும் இதே முறையில் செய்துள்ளேன்.
இரைச்சல் மிகுந்த வாழ்க்கையின் சலசலப்புகளிலிருந்து விலகி, சாந்தமான வாழ்க்கையை சுவாசிப்பதற்கான வழி தான் சவுண்ட் ஹீலிங். அதை ஆத்மார்த்தமாக ரசித்து கேட்பது மன அமைதியை தரும். எந்த கலையாக இருந்தாலும், அதை அன்புடன் செய்யும் போது, மக்கள் அரவணைத்துக் கொள்வர்.