UPDATED : டிச 11, 2025 10:30 AM
ADDED : டிச 11, 2025 10:32 AM

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளோருக்கு, வினாத்தாள் மாற்றம் குறித்து பயிற்சி அளிக்க, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., வரும் கல்வியாண்டு பொதுத்தேர்வில், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் மாற்றம் செய்ய உள்ளது. இனி, அறிவியல் வினாத்தாளில், ஏ, பி, சி., என மூன்று பிரிவுகள் இருக்கும். ஏ - உயிரியல், பி - வேதியியல், சி - இயற்பியல் பாடங்களுக்கான பகுதிகளாக பிரிக்கப்படும்.
அதேபோல், சமூக அறிவியல் வினாத்தாளில், ஏ - வரலாறு; பி - புவியியல்; சி - அரசியல் அறிவியல்; டி - பொருளாதாரம் என, நான்கு பிரிவுகள் இடம் பெறும். விடைத்தாளில், இதே கட்டமைப்பில் மட்டுமே விடைகளை எழுத வேண்டும். விடைகளை மாற்றி எழுதினால், மதிப்பீடு செய்யப்படாது.
இதனால், மாணவர்களுக்கு மதிப்பெண் இழப்பு ஏற்படும். இந்த தகவலை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்கள் சரியாக தேர்வெழுத, பயிற்சி அளிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.

