UPDATED : டிச 11, 2025 10:29 AM
ADDED : டிச 11, 2025 10:30 AM
சென்னை:
தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி தராததால், தமிழக மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள, 48 மருத்துவ இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,600 எம்.பி.பி.எஸ்., 1,583 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 1,736 எம்.பி.பி.எஸ்., 530 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
இவற்றில் சேர, 72,194 பேர், தர வரிசை பட்டியலில் தகுதி பெற்றனர். இதில், 7.5 சதவீத ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் நேரடி 'கவுன்சிலிங்' நடந்தது.
பொதுப் பிரிவினருக்கான 'கவுன்சிலிங்' 'ஆன்லைன்' முறையில் நடந்தது. இதுவரை நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், 25 எம்.பி.பி.எஸ்., மற் றும் 23 பி.டி.எஸ்., என, 48 இடங்கள் காலியாக உள்ளன.
இதில், சென்னை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மூன்று பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், ஒரு பி.டி.எஸ்., இடம் நிரம்பாமல் உள்ளது.
இவற்றை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம் அனுமதி கேட்டு, 20 நாட்களுக்கு மேலாகின்றன. ஆனால், இதுவரை என்.எம்.சி., யிடம் இருந்து ஒப்புதல் வராததால், இந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவ - மாணவியர் சேர்க்கைக்கு, என்.எம்.சி., அனுமதி கொடுக்காவிட்டால் நாடு முழுதும், 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் வீணாகக்கூடும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

