மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்பு
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : செப் 22, 2026 11:50 AM
ADDED : செப் 22, 2026 11:52 AM
திருவள்ளூர்:
'திருவள்ளூர் மாவட்டத்தில், பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., மாணவ மாணவியர், மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பயில, கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவ, மாணவியர், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயில, புதிய கல்வி உதவித் தொகை மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியரின் குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு, கற்பித்தல் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை, 'பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை - 5' என்ற முகவரியிலும், 'மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை - 5' என்ற முகவரியிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
அதோடு, கலெக்டர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும், www.bcw.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
மத்திய, மாநில அரசுகளின் இதர கல்வி உதவி திட்டங்களில் பயன்பெறும் மாணவ மாணவியர், இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்திலிருந்து சான்றிதழுடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
புதிப்பிக்கும் விண்ணப்பங்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் நவம்பர் 30ம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
