UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 10:26 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொலைநிலை பைலட் பயிற்சியை முடித்த 104 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
வேளாண் பல்கலையை தொலைதூர விமான ஓட்டிகள் பயிற்சி நிறுவனமாக (ஆர்.டி.பி.ஒ.), சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அங்கீகரித்துள்ளார். விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச் சூழல் கண்காணிப்பு, உள்கட்டமைப்பு ஆய்வுகள் போன்றவற்றுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.
விழாவில், நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தேசிய வேளாண் உயர் கல்வித் திட்டத்தின் ஆதரவுடன் தொலைதூர பைலட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 104 பேரின் அர்ப்பணிப்பு, சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன. பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, நீர், புவியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பழனிவேலன் பேசுகையில், ஆர்.பி.டி.ஒ. சான்றிதழ்கள் டிரோன் செயல்பாடுகளில் எங்கள் பட்டாதாரிகளின் திறமையை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், விவசாய வளர்ச்சி, அதற்கு அப்பால் பங்களிக்க அவர்கள் தயாராக இருப்பதையும் குறிக்கிறது, என்றார்.
பயிற்சி பெற்றவர்கள், பைலட் பயிற்சியின் நடைமுறை, அணுகுமுறை, நிஜஉலகப் பயன்பாடுகளை எடுத்துரைத்தனர். பலர் தங்கள் துறைகளில் சமகால சவால்களை எதிர்கொள்ள தங்கள் புதிய நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டனர்.