ஏற்றுமதிக்கான கூகுள் போன் இந்தியாவில் தயாரிப்பு துவக்கம்
ஏற்றுமதிக்கான கூகுள் போன் இந்தியாவில் தயாரிப்பு துவக்கம்
UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 10:24 AM

புதுடில்லி:
கூகுள் நிறுவனம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அதன் பிக்ஸல் ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சோதனை முறையிலான தயாரிப்பு பணிகளை, கூகுள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு, தனது ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற, கூகுள் நிறுவனம் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.
பிக்ஸல் போன்களின் தயாரிப்பை, இந்தியாவின் டிக்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், ஆப்பிள் போன்களின் இந்திய உற்பத்தியாளரான 'பாக்ஸ்கான்' நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன.
ஏற்றுமதிக்கான போன்களின் உற்பத்தி, வருகிற செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும், உற்பத்தி சீரான பின், ஏற்றுமதி துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. பேசிக் வேரியன்ட் வகை போன்களை டிக்சன் நிறுவனமும், புரோ வகை போன்களை பாக்ஸ்கான் நிறுவனமும் தயாரித்து வழங்க உள்ளன.
தற்போது இந்தியாவில் பிக்ஸல் போன்களின் தேவை குறைவாக உள்ளதால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
மேலும், ஆரம்பத்தில் ஐரோப்பிய சந்தைகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அதன்பின், அமெரிக்கா வின் சந்தை தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்ஸல் ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற, கூகுள் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.