வேளாண் பல்கலை இளமறிவியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
வேளாண் பல்கலை இளமறிவியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:48 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை, பொதுப்பிரிவின் கீழ், நகர்வு மேல் முறையில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 26ம் தேதி நடப்பதாக, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், வேளாண் பல்கலை, மீன்வளப் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை ( வேளாண் பாடப்பிரிவு) ஆகியவற்றுக்கு, முதலாமாண்டு சேர்க்கை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் நடத்தப்படுகிறது.
அதன்படி, கலந்தாய்வு நகர்வு மேல் முறையில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, 1,300 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, தற்காலிக சேர்க்கையானது தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம், சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தேர்வு பெற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல், சாதி மற்றும் மாற்று சான்றிதழுடன் வேளாண் பல்கலை அண்ணா அரங்கில், 26ம் தேதி நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இப்பட்டியல், https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, வார நாட்களில், காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை 94886 35077, 94864 25076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

