ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்: தலைமையாசிரியர்கள் குழப்பம்
ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்: தலைமையாசிரியர்கள் குழப்பம்
UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 07:11 PM
பொள்ளாச்சி:
தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான, ஆண்டு இறுதி தேர்வில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாட்களில் மாணவர்களை, பள்ளிக்கு வரவழைப்பதா அல்லது விடுமுறை அளிப்பதா என்ற குழப்பத்தில் தலைமையாசிரியர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 2ம் தேதி, ஆண்டு இறுதி தேர்வு துவங்கியது. வரும், 12ம் தேதி தேர்வு முடிந்து, கோடை விடுமுறை துவங்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ரம்ஜான் பண்டிகை, தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், இரு தேர்வுகள், வேறு தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 10ல் நடத்த இருந்த அறிவியல் பாடத் தேர்வு, 22ம் தேதிக்கும்; 12ல் நடத்த இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை, 24ம் தேதி முதல் துவங்குமென உறுதியாகியுள்ளது.
அதேநேரம், தேர்வுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட நாட்களில், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதா அல்லது விடுமுறை அளிப்பதா என்ற குழப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியர்கள் திணறி வருகின்றனர்.
அரசு முடிவு எடுக்கணும்
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஏற்கனவே, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தவிர, 12ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்கவுள்ளது. அப்பணியிலும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
இதனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். சிறப்பு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பர். மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தாலும், அவர்களை கண்காணிக்க முடியாது. விடுமுறை குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் கைவிரித்து விட்டனர். இதனால், செய்வதறியாது திணறி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.