இலவச சேர்க்கை கட்டணம் தாமதம்: தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி
இலவச சேர்க்கை கட்டணம் தாமதம்: தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி
UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 07:13 PM

சென்னை:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவசமாக சேர்த்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, பள்ளிக்கல்வி துறை வழங்காமல் தாமதம் செய்வதால், தனியார் பள்ளிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், அரசின் சார்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்குகிறது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக, 1,000 கோடி ரூபாய் நிதி பாக்கி உள்ளதாக, தனியார் பள்ளிகள் தெரிவித்தன.
இந்நிலையில், 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான நிதியில், 383.59 கோடி ரூபாயை பள்ளிகளுக்கு வழங்க, மார்ச் 1ல், பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டு, நிதியும் ஒதுக்கியது. ஆனால், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் இருந்து, நிதியை பகிர்மானம் செய்யும் பணி இன்னும் துவங்கவில்லை.
இரண்டு நிதி ஆண்டுகள் முடிந்த நிலையில், தனியார் பள்ளி இயக்குனரகம் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுவது, தனியார் பள்ளிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இந்த நிதியை விரைவாக வழங்காவிட்டால், கட்டாய கல்வி சட்டத்தில், மாணவர் சேர்க்கை நடத்துவதில், தனியார் பள்ளிகள் வேறு முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என, சில தனியார் பள்ளி சங்கத்தினரும்; இந்த பிரச்னைக்காக தேர்தலில் ஓட்டளிக்காமல் புறக்கணிப்போம் என, மற்றொரு சங்கமும் அறிவித்துள்ளன.