மம்தா மருமகன் மீது குற்றப்பத்திரிகை: ஆசிரியர் நியமன ஊழலில் சி.பி.ஐ., அதிரடி
மம்தா மருமகன் மீது குற்றப்பத்திரிகை: ஆசிரியர் நியமன ஊழலில் சி.பி.ஐ., அதிரடி
UPDATED : பிப் 27, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 04:22 PM
கோல்கட்டா:
ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மேற்கு வங்கத்தில், 2011 முதல், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கடந்த 2014 மற்றும் 2017ல் ஆசிரியர் தகுதித் தேர்வு வாயிலாக, அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்தில், 1,000 கோடி ரூபாய் வரை நடந்த ஊழல் தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., தனித்தனியாக விசாரித்து வருகின்றன.
அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, பள்ளிக் கல்வி வாரிய தலைவரும், திரிணாமுல் காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மாணிக் பட்டாச்சார்யா ஆகியோர் கைதாகி தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கில் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.
இந்த நிலையில், 28 பக்கங்களை கொண்ட மூன்றாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. அதில், ஆசிரியர் பணிக்காக, அபிஷேக் பானர்ஜி பேரம் பேசும் ஆடியோ என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.
இது, முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலளருமான அபிஷேக் பானர்ஜி தான் என ஊகிக்க முடிகிறது.
ஆடியோவில் இடம் பெற்றிருந்ததாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர் நியமனத்துக்கு, தலா 6.50 லட்சம் ரூபாய் நிர்ணயித்து பணம் வாங்கியதில், அபிஷேக் பானர்ஜிக்கும், முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தெரிந்தது.
ஆடியோவில், ஏற்கனவே வசூலித்த பணத்தை விட, கூடுதலாக 15 கோடி ரூபாய் வரை வசூலிக்குமாறு அபிஷேக் பானர்ஜி கேட்கிறார். மேலும் பணம் தராவிட்டால், நியமன ரத்து அல்லது தொலைதுார இடமாற்றம் என, அபிஷேக் பானர்ஜி எச்சரிக்கிறார்.
இது தவிர, கூடுதலாக 2,000 பேரிடம் இருந்து, 100 கோடி ரூபாய் வரை வசூலித்து, அபிஷேக் பானர்ஜி, மாணிக் பட்டாச்சார்யா, பார்த்தா சட்டர்ஜி ஆகியோர், தலா 20 கோடி ரூபாயையும், மீதமுள்ள தொகையை மற்ற குற்றவாளிகளும் பங்கு போட்ட தகவலும் ஆடியோவில் பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை குறித்து கருத்து தெரிவித்த அபிஷேக் பானர்ஜியின் வழக்கறிஞர் சஞ்சய் பாசு, இந்த குற்றப்பத்திரிகை, அபிஷேக் பானர்ஜிக்கு துாண்டில் போட்டு, துன்புறுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், அநியாயமாக குறி வைக்கப்பட்டிருக்கிறார் என்றார்.