கிராம பகுதிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும் மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்
கிராம பகுதிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும் மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்
UPDATED : நவ 09, 2024 12:00 AM
ADDED : நவ 09, 2024 11:20 AM
புதுச்சேரி:
கிராமப் புறங்களுக்கு சென்று டாக்டர்கள் மக்களுக்காக பணியாற்றவேண்டும் என பல் மருத்துவக்கல்லுாரி மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுரை வழங்கினார்.
கோரிமேடு, பல் மருத்துவக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசியதாவது:
இந்த மருத்துவக் கல்லுாரி கட்டடம், மிக அழகிய முறையில் கட்டப்பட்டு, அனைத்து வசதி களையும் உள்ளடக்கி இயங்கி வருகிறது. இங்கு படித்த மாணவர்கள், வெளிநாடு, வெளி மாநிலங்களிலும், பணியாற்றி வருகின்றனர். அந்தளவிற்கு சர்வதேச தரம் வாய்ந்ததாக இந்த கல்லுாரி உள்ளது.
இந்த பெருமை எல்லாம் இங்குள்ள பேராசிரியர்களையே சேரும். இந்த கல்லுாரி, மிகவும் கட்டுப்பாடு வாய்ந்த, மிகச்சிறந்த கல்லுாரியாக உள்ளது.
இங்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை எல்லாம் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கில், கல்லுாரிக்கு தேவையான அனைத்து நிதியையும் தடையில்லாமல் அரசு வழங்கி வருகிறது.
இங்கு படித்தவர்கள், சிறந்த பல் மருத்துவர்களாக மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகவும் வந்துள்ளனர். பல்கலை தேர்வில் நீங்கள், 100 சதவீதம் முழுமையாக வெற்றி பெற வேண்டும்.
மக்களுக்காக அனைத்து வழிகளிலும் நீங்கள் பணி யாற்ற வேண்டும். குறிப்பாக கிராமங்களுக்கு சென்று பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.