வேளாண் பல்கலை மாணவர்களுக்கு முதல்வர் ஆராய்ச்சி உதவித்தொகை
வேளாண் பல்கலை மாணவர்களுக்கு முதல்வர் ஆராய்ச்சி உதவித்தொகை
UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 11:16 AM

கோவை:
தகுதி வாய்ந்த முதுகலை மாணவர்களுக்கு ஆராய்ச்சி தளத்தை வழங்கும் நோக்கத்துடன், தமிழக அரசால் முதல்வர் ஆராய்ச்சி உதவித் தொகை (சி.எம்.ஆர்.எப்.,) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநில பல்கலை மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற ஏற்புடையவர்கள். ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், 2023-24 ஆண்டுக்கான, சி.எம்.ஆர்.எப்., உதவித் தொகையை, கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் பிரியதர்ஷினி (சுற்றுச்சூழல் அறிவியல்), கார்த்திகா (வேளாண் வானிலையியல்), மோகனப்பிரியா (பயிர் நோயியல்), இளமதி (வேளாண்மை பொருளாதாரம்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
மாதம் ரூ.25 ஆயிரம் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான உத்தரவை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். உதவித் தொகை பெற்ற மாணவர்களை, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, டீன் சுரேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.