விளம்பர அரசியலுக்காக கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் படிக்கும் அவலம்; நயினார் நாகேந்திரன் காட்டம்
விளம்பர அரசியலுக்காக கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் படிக்கும் அவலம்; நயினார் நாகேந்திரன் காட்டம்
UPDATED : ஆக 07, 2025 12:00 AM
ADDED : ஆக 07, 2025 09:28 AM
 சென்னை: 
விளம்பர அரசியலுக்காக வருங்கால கலாம்களை வெளியே தள்ளிய திராவிட மாடல். கொளுத்தும் வெயிலில் மரத்தடி மணலில் அமர்ந்து பிள்ளைகள் படிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
 
விளம்பர அரசியலுக்காக வருங்கால கலாம்களை வெளியே தள்ளிய திராவிட மாடல். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கிவரும் அரசு நடுநிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக வகுப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொளுத்தும் வெயிலில் மரத்தடி மணலில் அமர்ந்து பிள்ளைகள் படிக்கும் அவலம் அரங்கேறி உள்ளது.
மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அரசின் முகாம்களை விடுமுறை நாட்களில் வைக்க வேண்டுமென்ற அடிப்படையைக் கூட அறியாத திமுக அரசின் அலட்சியம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியின் நிர்வாகக் குளறுபடிகளால் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், தங்களின் தேர்தல் பிரசாரத்திற்காக மாணவர்களை இப்படி அலைக்கழிப்பதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
எனவே, இதில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். 
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

