குழந்தைகளின் ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து வருகிறது: சிறார் எழுத்தாளர் பாலபாரதி பேச்சு
குழந்தைகளின் ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து வருகிறது: சிறார் எழுத்தாளர் பாலபாரதி பேச்சு
UPDATED : ஜன 28, 2026 12:16 PM
ADDED : ஜன 28, 2026 12:19 PM

ராமநாதபுரம்: 'குழந்தைகளின் ஒழுக்கம் அவர்களின் பெற்றோரிடமிருந்து வருகிறது,' என ராமநாதபுரத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் எழுத்தாளர் பாலபாரதி பேசினார்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா பிப்., 4 வரை நடக்கிறது. இதில் 80 உள் அரங்குகள், அரசின் பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள், கைவினைப் பொருட்கள் கடைகள், பயிற்சி பட்டறை, கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களை 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்கலாம். தினமும் 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
சிறார் எழுத்தாளர் பாலபாரதி பங்கேற்று 'குழந்தைகள் எப்படி கற்கிறார்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது: குழந்தைகள் வளர்ப்பில் இன்றயை பெற்றோர் போதிய கவனம் செலுத்துவதில்லை. தங்கள் குழந்தைகள் தேர்வில் முதலிடம் பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவர்களின் திறனை அறிந்து கொள்வதில்லை. இதனால் கல்லுாரி கல்விக்கு பின் பணிக்கு செல்லும் போது அந்த பணி குறித்த திறன் பெற்றிருப்பதில்லை.
பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும். சமூகத்திலும், வீட்டிலும் பெற்றோர் எப்படி ஒழுக்கத்துடன் செயல்படுகின்றனரோ, அந்த ஒழுக்கம் தான் குழந்தைக்கும் வரும். குழந்தையின் முதல் பள்ளி வீடு, முதல் ஆசிரியர் பெற்றோர். குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அது போல் குடும்பத்தின் வேலை, பொருளாதார சூழலை குழந்தைகளிடம் பகிர வேண்டும் என்றார்.

