சிவில் சர்வீஸ் தேர்ச்சி சாத்தியமே: தேர்வர்களுக்கு நம்பிக்கை அளித்த முன்னாள் டி.ஜி.பி., ரவி
சிவில் சர்வீஸ் தேர்ச்சி சாத்தியமே: தேர்வர்களுக்கு நம்பிக்கை அளித்த முன்னாள் டி.ஜி.பி., ரவி
UPDATED : டிச 14, 2024 12:00 AM
ADDED : டிச 14, 2024 05:30 PM

சென்னை:
தனக்குத்தானே இலக்கு நிர்ணயித்து, இலக்கணங்களையும் வகுத்துக் கொண்டு தேர்வுக்கு தயாரானால், சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்று முன்னாள் டி.ஜி.பி., ரவி கூறி உள்ளார்.
தினமலர் நாளிதழ், வாஜிராம் அண்ட் ரவி பயிற்சி நிறுவனம் சார்பில், நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (டிச.14) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வாஜிராம் அண்ட் ரவி பயிற்சி நிறுவன இயக்குநர் ரவீந்திரன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அண்ணாமலை, ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போட்டித் தேர்வுகளில் சாதிப்பது எப்படி என்ற தலைப்பில் முன்னாள் டி.ஜி.பி., ரவி பேசினார்.
அவர் கூறியதாவது:
எந்த தேர்வாக இருந்தாலும் முனைப்போடு செயல்பட்டால் உங்களுக்கு தான் வெற்றி. நீங்கள் தேர்வில் வெற்றி பெறவில்லை என்று சொன்னால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலே உங்கள் வாழ்க்கை வெற்றி. ஆகையால் இந்த தேர்வில் ஜெயிக்க முடியாது என்று நினைக்கக்கூடாது.
மொத்தம் 48 பாடங்கள் உள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம். 2025 மதிப்பெண்களில் 900 மதிப்பெண்கள் எடுத்தால் அகில இந்திய ரேங்க் பட்டியலில் வந்துவிடலாம். பல்கலை தேர்வு போன்று நிறைய விஷயங்களை சிவில் சர்வீஸ் தேர்வின் போது எழுத முடியாது.
ஒவ்வொன்றையும் படிக்கும் போது உங்களுக்கு நீங்களே கேள்விகள் கேட்டுக் கொண்டு, திறனாய்வு செய்து படிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது உங்களின் உடல்மொழி, தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இயல்பான முறையில் உங்களை நீங்களை மேம்படுத்திக் கொண்டு அறிவுப்பூர்வமாக பதிலளித்தால் போதும்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அறிவுப்பூர்வமானவர்கள் அதிகம் பேர் உள்ளனர். தினமும் 40 நிமிடம் தியானம், யோகா, உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஓய்வு எடுத்துக் கொண்டு படியுங்கள்.
எல்லாவற்றையும் படிக்க வேண்டியதில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்துக்கு தேவையான, அத்தியாவசியமான புத்தகங்களை மட்டும் படியுங்கள். பெற்றோர், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க விடுங்கள். இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், இலக்கணங்களை வகுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வெற்றி உங்களை தேடி வரும்.
இவ்வாறு ரவி பேசினார்.