சிவில் சர்வீசஸ் தேர்வில் தோற்றாலும் வாழ்வில் நீங்கள் வெற்றி பெறலாம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் தோற்றாலும் வாழ்வில் நீங்கள் வெற்றி பெறலாம்
UPDATED : டிச 15, 2024 12:00 AM
ADDED : டிச 15, 2024 10:26 AM
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவதே, வாழ்வில் வெற்றியை தரும், என முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி பேசினார்.
நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியில், அரசு போட்டித் தேர்வுகளில் சாதிப்பது எப்படி? என்ற தலைப்பில், ரவி பேசியதாவது:
நான் படிக்கும்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வயது உச்ச வரம்பு, 26 ஆக இருந்தது. நான், 26 வயதில் தேர்வுக்கு தயாராகி, நேர்முகத் தேர்வு வரை சென்றேன்; ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.
வயது வரம்பை அதிகரிக்கக் கோரி, டில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அன்றைய பிரதமர் வி.பி.சிங், 28 ஆக உயர்த்தினார். அப்போது எனக்கு 28 வயது, ஒரு மாதம் ஆகியிருந்தது; அதனால் எழுத முடியவில்லை.
ஆனால், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால், வயது வரம்பு ஓராண்டு மட்டும், 31 என உயர்த்தினர். அந்த வாய்ப்பை பயன்படுத்திதான், நான் ஐ.பி.எஸ்., ஆனேன்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்று, அரசு பணிக்கு சென்றே ஆக வேண்டும் என்ற லட்சியம்தான் என் வெற்றிக்கு காரணம். முனைப்போடு, நம்பிக்கையோடு செயல்பட்டால், எந்த தேர்விலும் வெற்றி பெறலாம்.
வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினாலே, ஒருவரின் ஆளுமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எனவே, சிவில் சர்வீசஸ் தேர்வில் தோற்றாலும், வாழ்வில் வெற்றி பெற முடியும். நம்மால் வெற்றி பெற முடியாது என்ற நினைப்பே இருக்கக் கூடாது.
நாங்கள் படிக்கும்போது, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும். இப்போது எங்கும் புத்தகங்கள், கையேடுகள் பரந்து கிடக்கின்றன. ஒரு பாடத்திற்கு, 50 புத்தகங்களை படிக்கக் கூடாது. சிறந்த புத்தகம், கையேடுகளை தேர்வு செய்து படித்தாலே வெற்றி கிடைக்கும்.
இத்தேர்வு எழுதுபவர்கள் எதையும் சுருக்கமாக, புரியும்படி தெளிவாக எவ்வளவு வார்த்தைகள் எழுத சொல்லியிருக்கின்றனரோ, அந்த அளவுக்குள் தான் எழுத வேண்டும்.
கடந்த கால வரலாறுகள் தான், நிகழ்கால வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே, எந்தவொரு பாடத்தையும், நடப்பு நிகழ்வுகளையும், வரலாற்று தகவல்களையும் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய வேண்டும்.
இத்தேர்வு எழுதுபவர்களுக்கு, இப்போது மொழி தடையாக இல்லை. ஆங்கிலத்தில் பெரிய புலமை தேவையில்லை. 12ம் வகுப்பு அளவில் தான் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். அதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும். நம் தாய்மொழியிலேயே தேர்வு எழுத முடியும்.
மேலும், உடலும், மனதும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு தினசரி, 45 நிமிடங்கள் உடற்பயிற்சியும், 10 நிமிடங்கள் தியானமும் அவசியம்.
தினமும் குறிப்பிட்ட நிமிடங்கள் தியானம் செய்தால், மனதில் அமைதி பிறக்கும். படிப்பது அனைத்தும், மனதில் பதிந்து விடும். ஒன்றும் தெரியாதது போல இருக்கும். ஆனால், தேர்வு எழுத உட்கார்ந்ததும், பதில் வந்து விடும்.
இந்த தேர்வில் வென்று அரசு பணியில் இருப்பவர்களுக்கு, அரசியலமைப்பு சட்டம் தான் மாஸ்டர். சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் செய்ய வேண்டும்; சட்டத்தை தவிர, வேறு யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் என்பது வழிகாட்டியாக இருக்கும். எனவே, விரும்பும் பயிற்சி மையத்தில் இணைந்து படிக்கலாம். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை, பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஓரிரு முறை தோல்வி அடைந்தாலும், அவர்களிடம் எதிர்மறையாக பேசக் கூடாது.
இவ்வாறு ரவி பேசினார்.