நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியில் புத்தகங்களை அள்ளிச்சென்ற மாணவர்கள்
நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியில் புத்தகங்களை அள்ளிச்சென்ற மாணவர்கள்
UPDATED : டிச 15, 2024 12:00 AM
ADDED : டிச 15, 2024 10:28 AM

சென்னை:
தினமலர் நாளிதழ் மற்றும் வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் இணைந்து நடத்திய, நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை நடந்தது.
காலை 8:30 மணி முதல் மாணவ - மாணவியர், கலைவாணர் அரங்கிற்கு வரத் துவங்கினர். காலை 9:50 மணிக்குள் அரங்கத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. பல மாணவர்களோடு அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரை, அவரது தாய் முதுகில் சுமந்து வந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.
* சிவில் சர்வீசஸ் தேர்வுகள் என்றால் என்ன?
* முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களை எதிர்கொள்வது எப்படி?
* என்னென்ன பாடங்கள்?
* எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றால் வெற்றி கிடைக்கும்?
இக்கேள்விகளுக்கு, வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கார்த்திகேயன், நிகழ்ச்சியின் துவக்கத்தில் விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அண்ணாமலை, ரவி, வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, தினமலர் நாளிதழ் இயக்குனர்கள் ஆர்.லட்சுமிபதி, ஆ.லட்சுமிபதி ஆதிமூலம், ஆர்.சீனிவாசன் ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி வரவேற்றனர்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் வெளியிட்டுள்ள, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகங்களை, நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.