மாணவர்கள், போலீசாரிடையே மோதல்; பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு
மாணவர்கள், போலீசாரிடையே மோதல்; பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு
UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 12:15 PM
பாட்னா:
பீகாரில் பி.பி.எஸ்.சி., தேர்வை மீண்டும் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) சார்பில் கடந்த 13ம் தேதி தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 900 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு விதிமுறைகளை கடைபிடித்து முறையாக நடத்தப்படவில்லை என்று கூறி, தேர்வை ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் தேர்வை மீண்டும் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மறுதேர்வு நடத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று பி.பி.எஸ்.சி., தேர்வை எழுதி மாணவர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள் என சுமார் 700க்கும் மேற்பட்டோர் காந்தி மைதானத்தில் ஒன்று கூடினர். முன்னதாக, இந்த முதல்வர் சந்தித்து பேசுவதற்காக, ஜே.பி., கோலம்பர் பகுதியில் நடந்த மாணவர்களின் பேரணியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனிடையே, அனுமதியின்றி கூடியதாக மாணவர்களை கலைந்து போகுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போலீஸ்காரர்களின் ஒலிபெருக்கிகள் சேதப்படுத்தப்பட்டது. அத்துடன், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதனால், பீகாரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அனுமதியின்றி மாணவர்களை திரட்டியது, வன்முறையை துண்டியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக பிரசாந்த் கிஷோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.