UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 12:16 PM
பாட்னா:
பீஹாரில் அரசு பணியாளர் தேர்வு கமிஷன் நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், மறுதேர்வு நடத்தும்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அவர்கள் மீது தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டி அடித்தனர். இதில், பலர் காயமடைந்தனர்.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு பணியாளர் தேர்வு கமிஷன் சார்பில் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு கடந்த 13ம் தேதி நடந்தது. அப்போது, தேர்வுக்கு முன் கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, வினாத்தாள் கசிந்ததாக குறிப்பிடப்பட்ட பாப்பு பரிக்ஷா பரிஷார் தேர்வு மையத்தில் மட்டும், வரும் 4ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், மற்ற மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு செல்லும் என்றும், பீஹார் அரசு பணியாளர் தேர்வு கமிஷனின் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராஜேஷ் குமார் அறிவித்தார். எக்காரணம் கொண்டும் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; எனவே, அடுத்தக்கட்டமாக தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் அமைப்பினர், மறுதேர்வு நடத்தக்கோரி, 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்களின் போராட்டத்துக்கு ஜன் சுவராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று ஆதரவு அளித்தார். அப்போது, மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து மாநில அரசின் தலைமை செயலரை சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்தனர்.
தங்களின் கோரிக்கையை ஏற்க அரசு தரப்பு மறுத்ததால், மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பிரிவினர் முதல்வர் நிதீஷ் குமாரின் இல்லத்தை முற்றுகையிட சென்றனர். தடையை மீறி முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். இதில், பலர் காயம் அடைந்தனர்.