பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 19,608 பேர் பங்கேற்பு; 248 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 19,608 பேர் பங்கேற்பு; 248 பேர் ஆப்சென்ட்
UPDATED : மார் 12, 2026 06:36 PM
ADDED : மார் 12, 2026 06:38 PM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாட தேர்வினை 19,608 மாணவ, மாணவிகள் எழுதினர். 248 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 228 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10,308 மாணவர்கள், 9,550 மாணவிகள் என மொத்தம் 19,858 பேர் பங்கேற்கும் வகையில், 94 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 474 தனித்தேர்களுக்கு 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது. இதில், 10,127 மாணவர்கள், 9,481 மாணவிகள் என மொத்தமாக 19,608 பேர் தேர்வில் பங்கேற்றனர். 180 மாணவர்கள், 68 மாணவிகள் என 248 பேர் தேர்வெழுதவில்லை. தனித்தேர்வர்களில் 293 ஆண்கள், 140 பெண்கள் என 433 பேர் தேர்வில் பங்கேற்றனர். 28 ஆண்கள், 13 பெண்கள் என 41 பேர் தேர்வெழுதவில்லை. மேலும் நேற்று நடந்த தமிழ்பாட தேர்வில் ஒரு மாணவர், ஒரு மாணவி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வு ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆனந்தி, தேர்வு பணிகளை மேற்பார்வையிட்டார். உளுந்துார்பேட்டை வட்டார பள்ளிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார். அதே போல் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர் மற்றும் 5 குழுக்கள் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், 160 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் உட்பட 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
