10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
UPDATED : மே 16, 2025 12:00 AM
ADDED : மே 16, 2025 09:55 AM

சென்னை:
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகளே முதலிடம்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்றுள்ளனர்; மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப் பள்ளிகள்- 87.34%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 93.09%
100/100 மார்க்!
பாடம் வாரியாக,100/100 மார்க் எடுத்தவர்கள் விவரம்:
மொழிப்பாடம்- 32
தமிழ் - 8
ஆங்கிலம்- 346
கணிதம்- 1,996
அறிவியல்- 10,838
சமூக அறிவியல்- 10,256
தேர்வு முடிவுகளை https://www.digilocker.gov.in/, https://tnresults.nic.in/ இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
11ம் வகுப்பு ரிசல்ட்!
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.