12ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடக்கம்: தேர்வு பணியில் 540 பேர்
12ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடக்கம்: தேர்வு பணியில் 540 பேர்
UPDATED : மார் 02, 2026 10:09 AM
ADDED : மார் 02, 2026 10:12 AM
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ் 2 தேர்வை 6,333 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு பணியில், 540 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்., 6ம் தேதி வரை நடக்கிறது.
நீலகிரியில், பிளஸ் 2 தேர்வு 42 மையங்களில் நடக்கிறது. 2,920 மாணவர்கள் மற்றும் 3,413 மாணவிகள் என, மொத்தம், 6,333 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 1 தோல்வி அடைந்தவர்களுக்கான தேர்வில், 193 மாணவர்கள் மற்றும் 87 மாணவிகள் என மொத்தம், 280 பேர் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு, 61 மையங்களில் நடக்கிறது. 3,358 மாணவர்கள் மற்றும் 3,452 மாணவிகள் என மொத்தம், 6,810 பேர் எழுதுகின்றனர்.
தனித் தேர்வர்கள், 4 மையங்களில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகளையும் மற்றும் 3 மையங்களில், 10ம் வகுப்பு தேர்வுகளையும் எழுதுகின்றனர்.
தேர்வு பணியில் 540 பேர்
பிளஸ் 2 தேர்வு பணியில், 42 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 42 துறை அலுவலர்கள், 85 அலுவலக பணியாளர்கள், 356 அறைக் கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல 15 வழித்தட அலுவலர்கள் என மொத்தம் 540 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு பணியில் 61 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 61 துறை அலுவலர்கள், 122 அலுவலக பணியாளர்கள், 570 அறைக்கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல 25 வழித்தட அலுவலர்கள் என மொத்தம், 859 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேல்நிலைத் தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 61 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 80 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புகார் எண்கள்!
தேர்வுகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், முதன்மைக் கல்வி அலுவலர் - 9788859030; அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் - 9789773507; நேர்முக உதவியாளர் (மேல்நிலை) - 6380075043; நேர்முக உதவியாளர் (இடைநிலை) - 8778641230; கண்காணிப்பாளர் - 6380734580; பிரிவு எழுத்தர் - 9787554038 ஆகிய அலுவலர்களின் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

