பயிற்சி மைய சம்பவம்: ஆம் ஆத்மிக்கு இடி கொடுக்கும் இண்டியா
பயிற்சி மைய சம்பவம்: ஆம் ஆத்மிக்கு இடி கொடுக்கும் இண்டியா
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:25 PM
டில்லியின் ராவ் பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்து மூன்று ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில், கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
உரசல்
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் இதில் சிக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், அதில் உள்ள கட்சிகளுடன் இணக்கமான போக்கு இல்லை.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே நேரத்தில், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டது. இதனால், கூட்டணியில் இருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் உள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளம் புகுந்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படிக்கும் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் தொடர்பாக, மத்தியில் ஆளும் பா.ஜ.,வுடன் ஆம் ஆத்மிக்கு மோதல் உள்ளது. மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், டில்லியில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ., கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.
ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஆம் ஆத்மிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்துள்ளன. குறிப்பாக பார்லிமென்டில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பேசியுள்ளது, ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் உள்ள பல ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மழைநீர் வடிகால் அமைப்பதில் அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் ரீதியிலும், ஆம் ஆத்மிக்கு எதிராக தொடர் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
போராட்டம்
ராவ் பயிற்சி மைய விவகாரம் தொடர்பாக, இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சிக்கு, தேசிய மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
விதிகளை மீறி இயங்கும் பயிற்சி மையங்கள் குறித்த விபரங்களை அளிக்கும்படியும், டில்லி தலைமை செயலருக்கு, தேசிய மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து டில்லியின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கியதாகக் கூறி, முகர்ஜி நகரில் உள்ள த்ரிஷ்டி ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் உட்பட 13 பயிற்சி மைய நிறுவனங்களுக்கு, டில்லி மாநகராட்சி சீல் வைத்தது.
இந்நிலையில், த்ரிஷ்டி பயிற்சி மையத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக, மாணவர்கள் உட்பட ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படிக்கும் நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, டில்லி மாநகராட்சி மற்றும் ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய நிர்வாகத்துக்கு எதிராக, ராஜேந்திர நகரில் மாணவர்கள், பொது மக்கள் நடத்தி வரும் போராட்டம், மூன்றாவது நாளாக தொடர்ந்தது.