UPDATED : அக் 20, 2026 12:52 PM
ADDED : அக் 20, 2026 12:54 PM
சூலூர்:
மாநில அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டியில், லட்சுமிநாயக்கன் பாளையம் பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. ஆர்மோனியம் வாசித்தல் பிரிவில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், கோவை சூலூர் அடுத்த லட்சுமிநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமசாமி நாயுடு வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பு படிக்கும் மாணவி மதனா முதலிடம் பெற்று சாதனை புரிந்தார்.
சென்ற ஆண்டு நடந்த கலைத் திருவிழா போட்டியிலும் இம்மாணவி முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. திறமையை வெளிப்படுத்தி பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர், செயலர், தலைமை ஆசிரியை, நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியை, ஆசிரியைகள் பாராட்டினர்.
இதே போல், முதலமைச்சர் கோப்பைக்கான வில் வித்தை போட்டியில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10 வகுப்பு மாணவன் துஷ்யந்த், மாநில அளவில் 2ம் இடம் பிடித்தார். அவரை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
