ராஜராஜன், மகேந்திரவர்மன் காலகட்ட நாணயங்கள் பாலாற்றில் கண்டெடுப்பு
ராஜராஜன், மகேந்திரவர்மன் காலகட்ட நாணயங்கள் பாலாற்றில் கண்டெடுப்பு
UPDATED : மார் 31, 2024 12:00 AM
ADDED : மார் 31, 2024 09:44 AM

மாமல்லபுரம்:
செங்கல்பட்டு பாலாற்று பகுதியில், பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, பழங்கால பொருட்கள், நாணயங்கள் ஆற்றுப்படுகையில் உள்ளனவா என, செய்யாறு அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மதுரைவீரன், தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
ராஜராஜ சோழன் மற்றும்பல்லவர் கால செப்பு நாணயங்கள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை இதற்கு முன் கண்டெடுத் துள்ளார். தற்போது, செப்பு நாணயங்கள் கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
செங்கல்பட்டு அருகில், பாலாற்றில் ஆய்வுசெய்த போது, ராஜராஜ சோழன் காலத்தில் பயன்பாட்டில் இருந்த வட்ட வடிவ செப்பு நாணயம் கிடைத்துள்ளது. தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதே முத்திரை அமைப்புடன் உள்ளது. நாணயத்தின் முன்புறம் மன்னர் நின்றவாறும், பின்புறம் அமர்ந்தவாறும் உள்ளார்.
மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த போட்டின் உலோக நாணயம், நின்றுள்ள காளை, பிறைநிலா மற்றும் கும்பம் ஆகிய மங்கல சின்னங்களுடன் உள்ளது. சாதவாகனர் காலத்தைச் சேர்ந்த போட்டின் உலோக நாணயத்தில், முன்புறம் துதிக்கை துாக்கி பிளிறும் யானை, பின்புறம் உஜ்ஜயினி ஸ்ரீவத்சம் எழுத்து சின்னம் உள்ளது.
ஆடு மேய்க்கும் சிறுவன் வைத்திருந்த சிறிய மணி வடிவ பித்தளை பொருளையும் மீட்டேன். அதில், இடைக்கால குறுநில மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த, கிளி மற்றும் அமர்ந்த மனிதன் சின்னத்துடன் முத்திரை உள்ளது.
சுடுமண் தயாரிப்பாக, நுால் திரிக்கும் குழல், விளையாட்டு ஆட்டக் காய்கள், செப்பு துாண்டில் முள்,செப்பு குலச்சின்னம், கீறல்களுடன் மட்பாண்ட ஓடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.