போதைப்பொருட்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
போதைப்பொருட்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
UPDATED : ஜன 11, 2025 12:00 AM
ADDED : ஜன 11, 2025 09:48 AM

புதுச்சேரி:
புதுச்சேரி பள்ளிகளில் போதைப்பொருட்களை தடுக்க, புகார் பெட்டிகளை வைக்க வேண்டும், என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
புதுச்சேரி மாவட்ட போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக்கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது. சப்-கலெக்டர் சோமசேகர அப்பாராவ், இசிட்டா ரதி, சீனியர் எஸ்.பி., கலைவாணன், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து, துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:
பள்ளிகளுக்கு அருகில், 100 மீ., இடைவெளியில் உள்ள கடைகளில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருட்கள் தொடர்பான புகார் பெட்டிகள், அந்தந்த பள்ளிகளில் வைக்க வேண்டும். புகார் பெட்டியில் பெறப்படும் மனுக்களை ஒவ்வொரு மாதமும், கல்வித்துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருட்களால் உடல் உறுப்புகள் பாதிப்படைவது குறித்து அமைக்கப்படும் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிடவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.