பனியன் ஆடை வர்த்தகத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்! வளர்ச்சிக்கு வழிகாட்டும் சைமா
பனியன் ஆடை வர்த்தகத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்! வளர்ச்சிக்கு வழிகாட்டும் சைமா
UPDATED : ஜன 11, 2025 12:00 AM
ADDED : ஜன 11, 2025 09:46 AM

திருப்பூர் :
சமூக வலைதளங்கள் வாயிலாக வாடிக்கையாளரை கவர்ந்திழுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பம், பனியன் தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என, திருப்பூர் தொழில்துறையினர் விழிப்படைந்துள்ளனர்.
பின்னலாடை, ஆயத்த ஆடை, விளையாட்டு சீருடைகள், தொழில்நுட்ப ஆடைகள் என, எத்தகைய ஆடையாக இருந்தாலும், சட்டவிதிகளின்படி, ஆர்டர் பெற்று, உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்வது வாடிக்கையாக உள்ளது. நேரடி வணிகத்துடன், ஆன்லைன் டிரேடிங் என்ற இணையவழி வணிகம் வாயிலாக, நாடு முழுவதும் பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன.
திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் ஆடைகள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியகின்றன. இந்தியாவின் அனைத்து மாநில மக்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து சந்தைகளுக்கும், இங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
கொரோனா காலத்துக்கு பின், உலக அளவிலும் சரி, இந்தியாவுக்குள் நடக்கும் வர்த்தகத்திலும் சரி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் காலுான்றி விட்டது. அதாவது, ஒரே அறையில் அமர்ந்து கொண்டு, தனியே பிராண்ட் பெயர் ஒன்றை நிறுவி, அதன் வாயிலாக, வர்த்தகம் செய்வது அதிகமாகி விட்டது. குறிப்பாக, சமூக வலைதளங்கள் வாயிலாக, தங்களது பிராண்ட் பெயரை பிரசித்தி பெற செய்துவிட்டால், வேலை மிகவும் சுலமாகி விடுகிறது. அதன்பின், ஒரு பொருளை உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கி, தங்களது பிராண்ட் பெயர் சின்னத்துடன், மற்றவர்களுக்கு விற்பனை செய்வது எளிதாகி விடுகிறது.
கடந்த சில மாதங்களாக, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது திருப்பூர் பின்னலாடை தொழிலில் அதிகரித்துள்ளது. பிரத்யேகமாக, பிராண்ட் பெயர் உருவாக்கி, ஏற்றுமதி மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) துணை தலைவர் பாலசந்தர் கூறுகையில், நாளுக்குள் நாள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் திருப்பூர் கிளஸ்டரில் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரும், சமூக வலைதளங்களை பின்தொடர்கின்றனர். அதனைக் கொண்டே, டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது, உலகம் முழுவதும் அதிகம் பயனளிக்கிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களும், தனியே பிராண்ட் உருவாக்கி, புதிய விற்பனை தளத்துக்கு மாற விரும்புகின்றனர். அதற்காக, முன்னணி மார்க்கெட்டிங் நிறுவன பிரதிநிதிகளை அழைத்து, தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், கருத்தரங்கு நடத்தி வருகிறோம், என்றார்.
பி2பி மற்றும் டி2சி யுத்திகள்!
திருப்பூர் சைமா சார்பில், உற்பத்தியாளர்களும், சங்க உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில், சிறப்பு கருத்தரங்கு பிசினஸ் பேசலாம் வாங்க.. என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள டிஜிட்டல் மார்க்கெட் நிறுவன நிறுனர் சங்கீதா அபிேஷகம் பங்கேற்கும், சிறப்பு வழிகாட்டி கருத்தங்கு, வரும், 10ம் தேதி, மாலை 5:00 மணிக்கு சைமா அரங்கில் நடக்க உள்ளது. இதில், பி2பி (பிசினஸ் டூ பிசினஸ்) மற்றும் டி2சி (டைரக் டூ கஸ்டமர்) மார்க்கெட்டிங் குறித்த புதிய யுத்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.