UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM
ADDED : ஜூலை 15, 2025 03:55 PM
உடுப்பி:
இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை துாண்ட முயன்றதாக மாணவியை போலீசார் கைது செய்தனர்.
உடுப்பியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பாத்திமா ஷப்னா, 21. இவர், கல்லுாரியில் படிப்பதை விட்டு, மத ரீதியான விஷயங்களை பேசுவதும், மற்ற மதங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் செயல்பட்டு வந்தார்.
கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வந்ததால், அங்கும் தனக்கென ஒரு கும்பலை திரட்டினார். அப்போது, இவருக்கும் மற்ற சமூகத்தை சேர்ந்த மாணவியருக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
இதை மனதில் வைத்துக் கொண்ட பாத்திமா, விடுதியில் உள்ள கழிப்பறையில் கடந்த மே 7ம் தேதி, குறிப்பிட்ட சமூகம் குறித்து அருவருக்கத்தக்க வகையில் எழுதினார். இதுகுறித்து, சக மாணவிகள் விடுதியின் மேலாளரிடம் கூறினர். அவர், கார்கலா ஊரக போலீஸ் நிலையத்தில் பாத்திமா மீது புகார் செய்தார்.
விசாரணையின்போது, இது என்னுடைய கையெழுத்து இல்லை என, பாத்திமா கூறினார். இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள், கழிப்பறையில் எழுதப்பட்ட வாசகங்களையும், பாத்திமாவின் கையெழுத்தையும் ஆய்வு செய்தனர். இதில், கழிப்பறையில் அவர் தான் எழுதினார் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று கைது செய்யபட்டார்.