வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்!
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்!
UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM
ADDED : ஜூலை 15, 2025 08:56 AM

கோவை:
அரசு பள்ளி மாணவர்களில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வரும், வாசிப்பு இயக்க திட்டத்திற்காக, புதிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், வெளியிடப்படும் இந்த புத்தகங்கள், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 10 பக்கங்கள் கொண்டதாகும். இதில், 5 பக்கங்கள் ஒவ்வொன்றும், மாணவர்களை ஈர்க்கும் வகையில் வண்ணப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடுக்கும் மரம், அடிக்கும் மரம், தியா எங்கே?, சந்தனக் கூடு, பண்டித ரமாபாய், மாதியும் யானையும், நத்தையின் ஆசை ஆகிய புத்தகங்கள் வெளியீட்டுக்காக தயாராக உள்ளன.
இது குறித்து, கோவை மாவட்ட பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கக் கருத்தாளர் அருளானந்தம் கூறுகையில், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம், கதை சொல்லுதலை ஊக்குவிக்க இந்த புத்தகங்கள் உதவும்.
கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்களை, வரும் 18ம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட உள்ளார். மாநில பள்ளிக்கல்வித்துறை, இந்த புத்தகங்களை அனைத்து அரசு பள்ளி மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.