கல்லுாரி ஆசிரியர் இடமாறுதல் நவ.25க்குள் கலந்தாய்வு
கல்லுாரி ஆசிரியர் இடமாறுதல் நவ.25க்குள் கலந்தாய்வு
UPDATED : நவ 11, 2024 12:00 AM
ADDED : நவ 11, 2024 08:57 AM

சென்னை:
தமிழக கல்லுாரி கல்வி துறையின் கீழ் இயங்கும், கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பொது கலந்தாய்வு, நவ., 25ம் தேதிக்குள் நடத்தப்படும் என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக கல்லுாரி கல்வி துறையின் கீழ் இயங்கும், அரசு கலை - அறிவியல் கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரி ஆசிரியர்கள்; தொழில்நுட்பக் கல்வி துறையின் கீழ் இயங்கும், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், சிறப்பு பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து, பொது கலந்தாய்வு நடத்த ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு, உரிய நெறிமுறைகளை பின்பற்றி, நவ., 25க்குள் வெளிப்படை தன்மையுடன், இணைய வழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, இடமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு, ஆணைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.