UPDATED : நவ 11, 2024 12:00 AM
ADDED : நவ 11, 2024 08:56 AM

ஆவடி:
சென்னை தரமணியில், தமிழக அரசு உலகத்தரத்தில் டைடல் பார்க் கட்டடம் கட்டியது.
அவற்றில் உள்ள அலுவலக கட்டடங்கள், ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதனால், தென் சென்னையில் ஐ.டி., துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின.
அதேபோல், வட சென்னையிலும் ஐ.டி., துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் நோக்கில், ஆவடி அடுத்த பட்டாபிராமில், 11.41 ஏக்கர், 5.50 லட்சம் சதுர அடியில், 21 தளங்களுடன், டைடல் பார்க் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு, அலுவலக அறை, கூட்ட அறை உட்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
டைடல் பார்க் கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதற்காக, எஞ்சியுள்ள உட்புற அலங்கார பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், டிட்கோ நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துாரி, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டு, திருத்தி அமைக்க வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார்.