மாற்றுத்திறனாளி மாணவர்களை சேர்க்க அரசு பள்ளிகள் மறுப்பதால் குழப்பம்
மாற்றுத்திறனாளி மாணவர்களை சேர்க்க அரசு பள்ளிகள் மறுப்பதால் குழப்பம்
UPDATED : மே 13, 2026 03:09 PM
ADDED : மே 13, 2026 03:10 PM
சென்னை:
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதால், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதாக கூறி, மாற்றுத்திறனாளி மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள் மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 8ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 'ஸ்கிரைப்' வாயிலாக தேர்வு எழுதிய, மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைந்துள்ளனர்.
அடுத்த வாரம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க, தலைமை ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில், பார்வைத் திறன், சிந்தனை குறைபாடு உள்ள மாணவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டு தேர்வெழுத இயலாதோருக்கு, சொல்வதை எழுத உதவியாளர்களை அணுகலாம். அவ்வாறு உதவியாளர்களாக, இது வரை முதுநிலை ஆசிரியர்கள் தேர்வெழுதிய நிலையில், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பட்டதாரி ஆசிரியர்கள், 'ஸ்கிரைப்'பாக தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
அதாவது, அந்தந்த பாடப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வெழுதினால், மாணவர்கள் ஓரளவு விடைகளை வெளிப்படுத்தினாலே, அதை விவரித்து ஆசிரியர்கள் எழுதி வந்தனர்.
இதனால், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படாமல் இருந்தது. தற்போது பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு வரை மட்டுமே பாடம் நடத்துவதால், அவர்களால் அறிவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கான, தொழில்நுட்ப குறியீடுகளையோ, வார்த்தைகளையோ எழுத தெரியாததாலும், மாணவர்கள் வெளிப்படுத்தும் நிலையிலேயே எழுதியதாலும், அதிகளவில் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இதனால், பள்ளியின் தேர்ச்சியில், 5 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இது, அடுத்தடுத்து மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி புள்ளிகளை பாதிக்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களை, மற்ற மாணவர்களுடன் இணைந்து கற்கும் வகையில், பொதுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என, வற்புறுத்தும் அரசு, அவர்களின் தேர்ச்சியிலும் சலுகை காட்ட வேண்டும்.
இல்லாவிட்டால், அடுத்துவரும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் கண்காணித்து தான், கற்றல் குறைபாடு, சிந்தனைத்திறன் குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை சேர்ப்பது குறித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
