செயற்கை நுண்ணறிவு அடங்கிய உலகில் தொடர் கற்றல் மிகவும் அவசியம்: சவுமியா
செயற்கை நுண்ணறிவு அடங்கிய உலகில் தொடர் கற்றல் மிகவும் அவசியம்: சவுமியா
UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 12:40 PM
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பங்கேற்று மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.
கடலுார் மாவட்டம்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 86வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ரவி தலைமை தாங்கி, நேரடியாக பயின்ற 789 மாணவ - மாணவியருக்கு பட்டம், பல்வேறு பாடங்களில் முதன்மையாக தேர்ச்சி பெற்ற 38 மாணவ - மாணவியருக்கு, பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்கப் பதக்கம், ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
ஆராய்ச்சி பட்டமான பிஎச்.டி., மற்றும் எம்.பில்., 728 பேருக்கு வழங்கப்பட்டன. தொலைதுார கல்வி மையத்தில் பயின்ற 35,593 பேருக்கு தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. துணைவேந்தர் கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்றார். விழாவில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி உட்பட பலர் முனைவர் பட்டம் பெற்றனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய காச நோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகர் சவுமியா சுவாமிநாதன், முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி பேசியதாவது:
இயற்கை பேரழிவுகள், தொற்று நோய்கள் போன்ற, வாழ்க்கையை சீர்குலைக்கும் அசாதாரண சூழ்நிலைகளில் இருந்து மீள்தன்மை மற்றும் தகவமைப்பை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
உங்களை உயர்த்தும் மற்றும் ஊக்குவிக்கும் நபர்களுடன் பழகுங்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான ஓய்வு ஆகியவற்றின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சவால்களை சமாளித்து, உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை அங்கீகரிப்பது அவசியம். விவசாயம் முதல் விண்வெளி அறிவியல் வரை பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் சக்தி, செயற்கை நுண்ணறிவுக்கு உள்ளது.
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாம் உருவாக்க முடியும். செயற்கை நுண்ணறிவு உலகில் போட்டியிட, வாழ்நாள் முழுவதும் கற்பவராக இருப்பது அவசியம்.
கல்வி என்பது அறிவை பெறுவது மட்டுமல்ல; நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த தேவையான திறன்களையும், மதிப்புகளையும் வளர்ப்பதாகும். இவ்வாறு அவர் பேசினார்.