பள்ளி கல்வி துறையில் தொடரும் சர்ச்சைகள்; அமைச்சர் மகேஷுக்கு துறை மாற்றப்படுமா?
பள்ளி கல்வி துறையில் தொடரும் சர்ச்சைகள்; அமைச்சர் மகேஷுக்கு துறை மாற்றப்படுமா?
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 02:21 PM
சென்னை:
சென்னை அசோக் நகர் பள்ளியில், முன் ஜென்மம், மறுஜென்மம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய, பரம்பொருள் அறக்கட்டளை சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, தற்போது போலீஸ் பிடியில் இருக்கிறார்.
இன்னொரு பக்கம், இவ்விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், ஆசிரியர் சங்கங்கள் கோபம் அடைந்துள்ளன.
சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த 2023ல் அமைச்சர்கள் மகேஷ், மனோ தங்கராஜ் உள்ளிட்ட பல அமைச்சர்களோடு மகா விஷ்ணு தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த தொடர்பு அடிப்படையில் தான் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை, தமிழகம் முழுதும் பள்ளிகளில் நடத்த, அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பிரச்னை என்று வந்ததும், தலைமை ஆசிரியர் சரஸ்வதியை இடமாற்றம் செய்து, பலிகடா ஆக்குவதா?
பள்ளியில் ஆண்டு முழுதும் நிறைய நிகழ்ச்சிகள், வெளியாட்களை அழைத்து நடத்துகிறோம். அதற்கு முழு இசைவு தெரிவிப்பது, மாவட்ட, மாநில அதிகாரிகள் தான். அமைச்சர் விருப்பத்தின்படியே, பள்ளிக்கு இவர் பேச வருகிறார்; அவருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுங்கள் என, மேலிடத்தில் இருக்கும் அதிகாரிகள் சொல்வதால், தலைமை ஆசிரியர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர்.
அப்படித்தான், மகா விஷ்ணு நிகழ்ச்சிக்கும், அசோக் நகர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரச்னை என்றதும், பள்ளி தலைமை ஆசிரியரை வேறு ஊருக்குத் துாக்கி அடிக்கின்றனர். அதிகாரிகள் பேச்சை கேட்டு, அவர்கள் உத்தரவுப்படி நடந்ததற்கு இது தண்டையா?
இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையில், இந்த சர்ச்சை விவகாரம் தொடர்பாக விசாரித்துள்ள உளவுத் துறை அதிகாரிகள், அரசுக்கு இதன் பின்னணி குறித்து அறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீபத்தில், மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, பள்ளிகளுக்கு அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்; இது சர்ச்சையானது. ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு ஆன்மிக நிகழ்வு; அதற்கு சுற்றறிக்கை அனுப்புவோர், நாளை வேறொரு மதத்தைச் சேர்ந்த ஆன்மிக நிகழ்வுக்கும் இப்படி சுற்றறிக்கை அனுப்பினால் மீண்டும் சர்ச்சை எழும்.
அதே போல, கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமித்தபோது, அவருடைய பின்புலம் விசாரிக்கப்படவில்லை; அதுவும் சர்ச்சையானதும், அதை கிடப்பில் போட்டுள்ளனர்.
இப்படி பள்ளிக் கல்வித் துறை சார்பான அறிவிப்புகளும், நிகழ்வுகளும் பெரும் சர்ச்சைக்கு காரணமாகின்றன. ஏற்கனவே, ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் அமைச்சர் மகேஷ் கூர்ந்து கவனித்து, சரியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படிப்பட்ட சர்ச்சைகளை வராமல் தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விபரங்கள், அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டு உள்ளதால், அமைச்சர் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமைச்சர் உதயநிதியோடு அமைச்சர் மகேஷ் நெருக்கம் என்பதால், பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து பெரிதாக யாரும் கவலை கொள்ளாமல் இருந்தனர். அமைச்சரும் துறை ரீதியான நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தார்.
முதல்வரின் செயலர், பள்ளி கல்வித் துறையில் கவனம் செலுத்தியதால், அவரைக் கேட்டே அமைச்சர் செயல்பட்டு வந்தார். பின், செயலர் ஒதுங்கினார். இதைப் பயன்படுத்தி, நிர்வாகத்தில் புரோக்கர்கள் புகுந்தனர்.
அவர்கள் அமைச்சருக்கு நிர்வாகம் சொல்லிக் கொடுப்பதாகச் சொல்லி, அவரை பல நிலைகளிலும் குழப்பினர். அதனாலேயே, பள்ளிக் கல்வித் துறையில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றன.
அமைச்சருக்கு துறையை மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு முதல்வர் தரப்பினர் வந்துள்ளனர். வரும் 14ம் தேதி வாக்கில், முதல்வர் தமிழகம் திரும்புகிறார். அப்போது, அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.