பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிகளை பார்க்க கூட நேரமில்லாத பள்ளி கல்வித்துறை அமைச்சர்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிகளை பார்க்க கூட நேரமில்லாத பள்ளி கல்வித்துறை அமைச்சர்
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 02:22 PM
சென்னை:
திருச்சியில் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் விடுதியில் தலைமை ஆசிரியரின் மகனும், பயிற்சி டாக்டருமான சாம்சன் டேனியல் என்பவர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார்.
இதனையடுத்து சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் பேச்சு தங்களை அவமதிப்பதாக இருப்பதாக மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த நாளே ஆசிரியர் சங்கருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேரில் சென்று பாராட்டினார். மேலும், ஆசிரியரை அவமதித்த மகாவிஷ்ணுவை சும்மா விடுவதில்லை என்றெல்லாம் அமைச்சர் பேசினார்.
இது ஒருபுறம் இருக்க அன்பில் மகேஷின் சொந்த மாவட்டமான திருச்சியில் உள்ள மேலப்புதூரில் அமைந்துள்ள டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளியின் மாணவ, மாணவிகள் விடுதியில், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணியின் மகன் சாம்சன் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வரும் சாம்சன் டேனியல், கடந்த 6 மாதங்களாகவே, 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் கிரேஸ் சகாயராணி மற்றும் அவரது மகன் டாக்டர் சாம்சன் டேனியலை போலீசார் கைது செய்தனர்.
டாக்டர் சாம்சன் டேனியல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தினாலும் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்திக்கவில்லை என சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அடுக்கடுக்கான கேள்விகள்
இது பற்றி சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விகள்: உங்களின் சொந்த மாவட்டமான திருச்சி மேலப்புதூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் கடந்த 6 மாதத்திற்கு மேலாக பயிற்சி மருத்துவர் காம கொடூரன் டாக்டர் சாம்சனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். அந்த சிறுமிகளை நேரில் சென்று பார்க்கவோ, ஆதரவு சொல்லவோ நேரம் இல்லை; அப்படித்தானே கல்வித்துறை அமைச்சரே? நமது பிள்ளைகள் அங்கு படித்திருந்தால் நாம் சும்மா இருந்திருப்போமா அமைச்சரே?
மேடைக்கு மேடை எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை, பள்ளிகளில் பயிலும் மாணவிகளேயே எனது பிள்ளைகளாக பாவிக்கிறேன் என்றும் முழங்குகிறீர்களே.. அது எல்லாம் வெறும் வெற்று பேச்சா? தவறு செய்த பயிற்சி டாக்டர் சாம்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏன் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய படவில்லை? தவறுக்கு உடந்தையாக இருந்து டாக்டரின் தாயார் தலைமை ஆசிரியர் கிரேஸ் சகாயராணி நிரந்தர பதவி நீக்கம் செய்யபடவில்லை.
காரணம் என்ன?
பள்ளியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவிற்கு அலறி துடிக்கும் அமைச்சரே! பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சி டாக்டர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஆகிய இருவர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சொல்ல ஏன் மனம் வரவில்லை?.
இவ்வாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.