அரசு பள்ளி விழாவில் கொடிகம்பத்தில் ஏறிய மாணவன் புகைபடத்தால் சர்ச்சை
அரசு பள்ளி விழாவில் கொடிகம்பத்தில் ஏறிய மாணவன் புகைபடத்தால் சர்ச்சை
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 09:48 AM
திருவனந்தபுரம்:
அரசு பள்ளியில் நடந்த விழாவில் கொடியேற்றலின் போது சிக்கிய கொடியை பிளஸ் 2 மாணவன் ஒருவன் கொடி மரத்தில் ஏறி சரி செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கலை விழா நடந்தது. இதில் கல்வித்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவின் போது அங்கு கலை விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கொடிகம்பத்தில் உச்சியில் கொடி சரியாக பறக்காமல் சிக்கியது. இதையடுத்து பிளஸ்டூ படித்து வரும் ஒரு மாணவன் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் , ஆபத்தை உணராமலும் கொடி கம்பத்தில் ஏறி சரி செய்தான். இதன் புகைப்படம் இணையத்தில் வைரலானதால் சர்ச்சை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வி இயக்குநர் ஷாநவாஸுக்கு அமைச்சர் சிவன் குட்டி உத்தரவிட்டார். முன்னதாக விழா ஏற்பாடு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கொடிக்கம்பத்தில் மாணவனை ஏற உத்தரவிட்டது யார் என விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில், தாம் என்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றுள்ளதால், தாமாகவே கொடி கம்பத்தில் ஏறியதாகவும், தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் விளக்கம் அளித்து உள்ளார்.
இ்ந்நிலையில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்க தானாக முன்வந்து வழக்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.