கலெக்டர் கூட்டங்கள் புறக்கணிப்பு; அரசு டாக்டர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
கலெக்டர் கூட்டங்கள் புறக்கணிப்பு; அரசு டாக்டர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 09:46 AM
சென்னை:
கலெக்டர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில் தேசிய நலவாழ்வு அலுவலகத்தில் நடந்த, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் டாக்டர்களை, ஒருமையில் பேசி மிரட்டியதாக, டாக்டர்கள் குற்றம் சாட்டினர்.
அதேபோல், திருச்சி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களும், அரசு டாக்டர்களை அவமதிப்பதாக புகார் எழுந்தது.
அவர்களை கண்டித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களில், டாக்டர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்தனர்.
அவர்களுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு, நேற்று முன்தினம் பேச்சு நடத்தினார். அப்போது, டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, ஜனவரி மாதம் வரை அவகாசம் கேட்டார். அதுவரை போராட்டங்களை கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், ஒத்துழையாமை போராட்டத்தை தொடருவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கோரிக்கைகளை நிறைவேற்ற, துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார். நாங்கள் பொது மக்கள் பாதிக்காதவாறு, ஒத்துழையாமை போராட்டத்தை அறிவித்துள்ளோம். அதன்படி, முதல்வர் காப்பீடு தொடர்பான கூட்டம், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம்.
அதேபோல், அலுவலக ரீதியாக உள்ள, வாட்ஸ் ஆப் குழுவில் இருந்தும் வெளியேற முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, மக்களை பாதிக்காத வகையில் போராட்டத்தை தொடர்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.