நீட் அல்லாத படிப்புகளுக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு!
நீட் அல்லாத படிப்புகளுக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு!
UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:24 PM

புதுச்சேரி:
நீட் அல்லாத படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல், முதல் மற்றும் இரண்டாம்சுற்று கவுன்சிலிங்கிற்கான அட்டவணையை சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நீட் அல்லாத படிப்புகளை பொருத்தவரை மாநிலத்தில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
நீட் அல்லாத தொழில் படிப்புகளில் 5,264 இடங்கள், கலை அறிவியல் கல்லுாரிகளில் 4,320, நுண்கலை படிப்புகளில் 75, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி, மகளிர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பில் 334 இடங்கள் என மொத்தம் 9,993 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் நேற்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. முதல் நாளான நேற்று பலரும் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டியதால் சென்டாக் இணையதளம் ஸ்தம்பித்தது.
ஒவ்வொரு ஆண்டும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் விண்ணப்பம் வாங்கும் சென்டாக், இந்தாண்டு முதல்முறையாக திட்டமிட்டு களம் இறங்கியுள்ளது. தரவரிசை பட்டியல், முதல் சுற்று கவுன்சிலிங், இரண்டாம் சுற்று கவுன்சிலிங் வரை மாணவர் சேர்க்கை அட்டவணையை திட்டமிட்டு வெளியிட்டுள்ளது.
தரவரிசை பட்டியல்
ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது வரும் 22ம் தேதி முடிந்ததும், அடுத்த மாதம் 5ம் தேதி வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இதில் ஆட்சேபனைகள் வரவேற்று, திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் 9ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்று கவுன்சிலிங்
அத்துடன், நீட் அல்லாத படிப்புகளுக்கு முதல் சுற்று கவுன்சிலிங் நடத்துவதற்கான படிப்புகள் முன்னுரிமை ஜூன் 11ம் தேதி வரை பெறப்படும். ஒருநாள் கழித்து ஜூன் 13ம் தேதி இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
ஜூன் 15ம் தேதி ஆன்லைனில் முதல் சுற்று கவுன்சிலிங் நடத்தி மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்படும். சீட் கிடைத்த மாணவர்கள் ஜூன் 26ம் தேதி இடம் கிடைத்த கல்லுாரியில் சேர வேண்டும்.
இரண்டாம் சுற்று கவுன்சிலிங்
நீட் அல்லாத படிப்புகளுக்கான முதல் சுற்று கவுன்சிலிங் முடிந்த இரண்டு நாட்களுக்கு பின், ஜூன் 24ம் தேதி இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கிற்கான பதிவுகள் ஆன்லைனில் துவங்குகிறது. இந்த இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 26ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 29 ம் தேதி இரண்டாம் சுற்று கவுன்சிலிங் நடத்தி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் சீட் கிடைத்த மாணவர்கள் ஜூலை 5ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.
இந்த இரண்டு சுற்று கவுன்சிலிங்கிற்கு அடுத்ததாக, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், மாப் அப் கவுன்சிலிங், ஸ்ட்ரே கவுன்சிலிங் என மூன்று வகையான கவுன்சிலிங் நடத்தி, நீட் அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிக்கப்படும் என சென்டாக் அறிவித்து, கவுன்சிலிங் நடைமுறைகளை வேகப்படுத்தி வருகிறது.