ஜி.பி.எப்., திட்ட ஆசிரியர்களை சி.பி.எஸ்.,க்கு மாற்ற நெருக்கடி
ஜி.பி.எப்., திட்ட ஆசிரியர்களை சி.பி.எஸ்.,க்கு மாற்ற நெருக்கடி
UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM
ADDED : ஜூலை 29, 2025 08:42 AM
 மதுரை : 
தமிழகத்தில் 22 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (ஜி.பி.எப்.,) பயன்பெற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (சி.பி.எஸ்.,) மாறும்படி அதிகாரிகள் உத்தரவிடுவதால் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஏப்ரலுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஜி.பி.எப்., திட்டத்தில் உள்ளனர். 2003 ஏப்.,1க்கு பின் நியமனம் பெற்றவர்கள் சி.பி.எஸ்., திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
அப்போது முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கை, மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான்.
இந்நிலையில், கல்வித்துறையில் ஆசிரியர்கள் விவரம் குறித்து ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தில் ஆசிரியர்களின் அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான சாப்ட்வேரில், 2003 ஏப்., 1க்கு பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களை சி.பி.எஸ்., திட்டத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.
ஆனால் இந்த சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய முடியாத 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 2003 முதல் தற்போது வரை ஜி.பி.எப்., திட்டத்தில் இருந்துள்ளனர். அவர்கள் வங்கிக் கடன் பெறுவது உள்ளிட்ட பண பலன்களையும் பெற்று வருகின்றனர். ஆனாலும் அவர்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
கட்டாய கடிதம் இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் அழைத்து 'நீங்கள் 2003, ஏப்.,1க்கு பின் நியமிக்கப்பட்டு உள்ளதால் சி.பி.எஸ்.,க்கு தான் மாற வேண்டும்.
அதற்காக கல்வித்துறைக்கு கடிதம் கொடுங்கள், அவசரம்' என கட்டாயப்படுத்த துவங்கியுள்ளனர். இதனால் 22 ஆண்டுகளாக ஜி.பி.எப்.,ல் இருந்தவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
தமிழகத்தில் 2023 ஆக., 6ல் ஜி.பி.எப்., ரத்து செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு முன்தேதியிட்டு, அதாவது 2003 ஏப்.,1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்ற ரீதியில் இதை ஏற்க முடியாது என கூறிய நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரை ஜி.பி.எப்., திட்டத்திலேயே தொடர உத்தரவிட்டது. இது பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிகாரமாக உள்ளது.
ஆனால் இதை கருத்தில் கொண்டு, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் பதிவேற்றம் செய்யும் சாப்ட்வேரில் திருத்தத்தைக் கல்வித்துறை செய்யாமல், 22 ஆண்டுகளாக ஜி.பி.எப்.,ல் பயன்பெறுவோரை சி.பி.எஸ்.,க்கு மாறுங்கள் என கடிதம் கேட்டு கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. 22 ஆண்டுகளாக ஜி.பி.எப்.,ல் தொடர்ந்தபோது கல்வித் துறை கோமாவிலா இருந்தது.
இதுபோன்ற அதிகாரிகள் முடிவுகளால்தான் கல்வித்துறையில் வழக்குகள் அதிகரிக்கிறது. இவ்விஷயத்தில் நீதிமன்றம் உத்தரவை பின்பற்றி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை நீதிமன்றத்திற்கு அலையவிடாமல் பொதுவான உத்தரவை கல்வி அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் என்றார்.

