தனி நபர் வருமானத்திற்கு கல்வி மிக முக்கியம்; பட்டமளிப்பு விழாவில் முதல்வர் அட்வைஸ்
தனி நபர் வருமானத்திற்கு கல்வி மிக முக்கியம்; பட்டமளிப்பு விழாவில் முதல்வர் அட்வைஸ்
UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM
ADDED : ஜூலை 29, 2025 08:50 AM
 புதுச்சேரி : 
புதுச்சேரி, ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 26வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 79 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ரத்னகுமார், மாணவி பரணி ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஹைதராபாத், நரசிம்மராவ் தெலுங்கானா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஞான பிரகாஷ் வாழ்த்தி பேசினார்.
சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன் குமார், அனிபால் கென்னடி, தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர் யாசின் முகமது சவுத்ரி, மருத்துவப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லுாரி புலமுதல்வர் முருகவேல் வரவேற்றார். 
விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: 
புதுச்சேரியில் கால்நடை மருத்துவ கல்லுாரி துவங்கியபோது, சிறந்த கல்லுாரியாக வருமா என்ற அச்சம் இருந்தது. தற்போது, சிறந்த கல்லுாரியாக 1,228 மாணவர்கள் படித்து, பட்டங்களை பெற்று வெளியே சென்றுள்ளனர். நாட்டிலேயே முதல் கால்நடை கல்லுாரியாக திகழ்ந்து, அனைத்து அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை எல்லோருக்கும் தரமான கல்வி என்பது தான் அரசின் எண்ணம். அதற்காக, அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை முறையாக நிறைவேற்றி, அனைவருக்கும் கல்வி என்பதை உறுதியாக கொடுத்து கொண்டிருக்கின்றது. அரசு கொடுக்கும் கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், பொருளாதாரத்தில் உயர்ந்த மாநிலமாக இருந்து கொண்டு இருக்கிறது.
தனி நபர் வருமானத்தில் சிறிய மாநிலங்களில், முதல் மாநிலமாக உள்ளோம். அதற்கு கல்வி மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த கல்லுாரியில், நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கருவிகளை கொண்டு வர அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்லுாரிக்கான விடுதி தேவையை நிறைவேற்ற நிதியை ஒதுக்கப்படும் என்றார்.

