கிரையோஜெனிக் கிங் நாராயணன்: விண்வெளியின் சாதனை விஞ்ஞானி
கிரையோஜெனிக் கிங் நாராயணன்: விண்வெளியின் சாதனை விஞ்ஞானி
UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:54 AM
ஏழைக்குடும்பத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் இந்திய விண்வெளித்துறையில் உயரிய இடத்தை பிடித்தவர். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருபவர் தமிழரான விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன்.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும், திருவனந்தபுரம் திரவ உந்துவிசை திட்ட மைய (எல்.பி.எஸ்.சி.,) இயக்குனராக உள்ளார். இஸ்ரோவில் 41 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நுட்ப உதவியாளர் என்ற கீழ்நிலை பணியில் சேர்ந்து, உயர்பதவியான விண்வெளித்துறையின் செயலர் அந்தஸ்தில் மூத்த விஞ்ஞானியாக (அபெக்ஸ் ஸ்கேல் சயின்டிஸ்ட்) உள்ளார்.
இஸ்ரோவின் ராக்கெட்களுக்கான உந்து இன்ஜின்கள் வடிவமைப்பது, தயாரிப்பது எல்.பி.எஸ்.சி.,யின் முக்கியப்பணி. ராக்கெட்கள் விண்ணில் பாயவும், செயற்கைக்கோள்கள் சுற்றி வரவும் அடிப்படையாக அதில் நிறுவப்படும் இன்ஜின்களின் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. 1990களில் இந்தியா இத்தொழில் நுட்பத்திற்காக முன்னேறிய நாடுகளை சார்ந்திருந்தது.
ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் பெற, அப்போது அந்நாட்டிற்கு இந்தியாவால் அனுப்பப் பட்ட 20 விஞ்ஞானிகளில் ஒருவர் இவர். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட நாராயணன் இஸ்ரோவில் பணியாற்றிக்கொண்டே, கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் கிரையோஜெனிக் தொடர்பாக எம்.டெக்., படித்து முதல் மாணவராக சாதனை புரிந்தார். கரக்பூர் ஐ.ஐ.டி.யில் விண்வெளித்துறையில் ஆய்வு செய்து, கிரையோஜெனிக் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றார். உலக அளவில் இந்த தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் நாராயணனும் ஒருவர்.
இந்தியா சாதித்தது
மிகவும் சிக்கல் வாய்ந்த கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு பரிமாற அன்று ரஷ்யா மறுத்தது. அதை சவாலாக கொண்ட சில விஞ்ஞானிகளில் நாராயணனும் ஒருவர். அவர்கள் அத்தொழில்நுட்பத்தை உருவாக்க இரவுபகலாக உழைத்தனர். நீண்ட ஆராய்ச்சியின் பயனாக 2014ல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவானது கிரையோஜெனிக் இன்ஜின்.
சி 25 என்று அழைக்கப்படும் அதிசக்தி கொண்ட கிரையோஜெனிக் இன்ஜின் திட்ட இயக்குனராக இருந்து அதனை வெற்றிகரமாக்கியவர் நாராயணன். இவரது ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவும், அற்புதமான நிர்வாக ஆற்றலுமே வெற்றிக்கு உதவியது. எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த கிரையோஜெனிக் இன்ஜின் முழுக்க நம் நாட்டில் உருவாக்கப்பட்டது.
உலகில் ஐந்து நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் தொழில்நுட்பம் இருந்தது. இந்தியா அதில் ஆறாவது நாடாக சாதித்தது. இந்த தொழில்நுட்பத்தில் கிடைத்த வெற்றியே, பின்னர் சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக கால் பதிக்க உதவியது.
சந்திரயான் 2 விண்கலம் மென்மையாக தரையிறங்குவதில் சில சவால்களை சந்தித்தது. அத்திட்டம் வெற்றிபெறாத நிலையில், அதற்கான காரணம் என்ன; எங்கு தவறுகள் நிகழ்ந்தன என கண்டறியும் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த குழு மிகக்குறுகிய காலத்தில் பிரச்னைகளை கண்டறிந்து சந்திராயன் 3ல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் வழிகாட்டியது.
சந்திரயான் 3 வெற்றி
பூமியில் இருந்து நிலவுக்கு சந்திராயன் 3 ஐ கொண்டு செல்லவும், நிலவை சுற்றவும் மென்மையாக தரையிறங்கவும் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணம். இதற்காக கிரையோஜெனிக் இன்ஜின் உட்பட இரண்டு இன்ஜின்கள், விண்கலத்தை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய திரவ உந்துவியல் இன்ஜின், லேண்டர் நிலவில் மென்மையாக தரையிறங்க உதவிய இயந்திரம் ஆகியவற்றை சிறப்பாக வடிவமைத்து, உற்பத்தி செய்து பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்றது நாராயணன் தலைமையிலான எல்.பி.எஸ்.,சி., இந்த மையத்தில் 2018 முதல், அதிக காலம் இயக்குனராக பணியாற்றுபவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
விண்வெளித்துறையின் புதிய முயற்சியான மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணியில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திரவஉந்துவியல் இன்ஜினை வடிவமைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது.
இது கூட்டு முயற்சி
எல்.பி.எஸ்.சி., மையத்தில் அவரிடம் உரையாடிய போது...
என்னுடைய தனிப்பட்ட சாதனைகள், பெற்ற அறிவு எல்லாவற்றிற்கும் கடவுளின் அருள், பெற்றோர் வன்னியபெருமாள், தங்கம்மாள், ஆசிரியர்களின் அன்பே முக்கிய காரணம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்காட்டுவிளை கிராமத்தில் பிறந்தேன். அங்கு ஓலைக்கூரை பள்ளியில் படித்தேன். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் 5ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்பா என்னை 10ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். மண்ணெண்ணெய் விளக்கில் தான் படித்தேன். பள்ளிப் பருவத்தில் படிப்பு...படிப்பு.. என்று தான் இருப்பேன். ௧0ம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்வானேன்.
உயர்படிப்பிற்கான வழிகாட்டுதல் இல்லை; விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவும் இல்லை. ஆனால் நன்றாக படிக்க வேண்டும்; தேர்வு செய்யும் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் மட்டும் இருந்தது. அன்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் கிடைத்தால் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்க சொல்வார்கள்; உடன் வேலையும் கிடைக்கும் என்பார்கள். நானும் அப்படித்தான் பாலிடெக்னிக் படித்தேன். இஸ்ரோவில் சேர்ந்த பிறகுதான் இன்ஜினியரிங் படித்தேன்.
விடிய விடிய இஸ்ரோவில்
திருமணத்திற்கே ஓரிரு நாட்கள் தான் லீவு எடுத்தேன். பல நாட்கள் வீட்டிற்கே செல்லாமல் இஸ்ரோவில் இருந்திருக்கிறேன். அப்படிச்சென்றாலும் நான்கு மணி நேரம் துாங்க தான் செல்வேன். எனக்கு பக்க பலமாக இருப்பவர் என் மனைவி முனைவர் கவிதா ராஜ். அவரது ஒத்துழைப்பு, குடும்பத்தினர் ஆதரவு என்னை இந்த அளவு உயர்த்தியுள்ளது.
விண்வெளியில் இந்தியா சாதிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ள பாரத பிரதமர் மோடி, இஸ்ரோ வந்த போது கிரயோஜெனிக் தொழில்நுட்பம் குறித்து விளக்கியதை வாழ்நாள் மகிழ்ச்சியாக கருதுகிறேன். நான் விண்வெளித்துறைக்கு ஆற்றிய பணிக்காக கரக்பூர் ஐ.ஐ.டி.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஜனாதிபதி முர்முவிடம் பெற்றது மிகப்பெரிய பெருமை.
செமிக்கிரையோ இன்ஜின்கள்
உலகில் விண்வெளி தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டுள்ளது. அதற்கேற்றவாறு, அதனை முந்திக்கொண்டு நம் நாடும் வளர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். திரவ ஆக்ஸிஜன், ரிபைன்டு மண்ணெண்ணெய் எரிபொருளை கொண்ட செமிக்கிரையோ இன்ஜின்களை வடிவமைத்து சோதனைகள் நடந்து வருகின்றன. கோள்களுக்கு நீண்ட துாரம் ராக்கெட்கள் பயணிக்க உதவும் மின்சார உந்துவியல் இன்ஜின்களை வடிவமைக்கும் திட்டத்திலும் இறங்கி உள்ளோம்.
மனிதர்கள் விண்ணிற்கு சென்று திரும்பும் 'ககன்யான்' திட்டத்தில் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் பயணிக்கும் ஊர்தியும், இன்ஜின்களும் வடிவமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் தரக்கட்டுப்பாடு குழு தலைவராகவும் உள்ளேன்.
இச்சாதனைகளுக்கு நான் மட்டும் அல்ல; என்னுடன் பணியாற்றும் விஞ்ஞானிகள், பொறியாளர்களின் கூட்டு முயற்சியே காரணம்.
இவ்வாறு கூறினார்.
கட்டுரையாளர்: ஜி.வி.ரமேஷ்குமார்