4 பள்ளி மாணவியரின் மனநிலை பற்றி கேட்டிருந்தோமே... ஏன் கொடுக்கவில்லை?
4 பள்ளி மாணவியரின் மனநிலை பற்றி கேட்டிருந்தோமே... ஏன் கொடுக்கவில்லை?
UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:56 AM

சென்னை:
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரித்து அறிக்கை அளிக்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
நான்கு பள்ளிகளில், போலி என்.சி.சி., முகாம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வேறு பள்ளிகளிலும் முகாம் நடத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கப்படுவதாகவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, முக்கிய நபரான சிவராமன் மரணம் தொடர்பான வழக்கில், மாஜிஸ்திரேட்டின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு பள்ளியில் மட்டுமே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக கூறிய நீதிபதிகள், மற்ற மூன்று பள்ளிகளிலும் விசாரணை நடத்தி, மாணவியரின் மனநலத்தை அறிந்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.
சிவராமன் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை, விரைந்து தாக்கல் செய்யும்படி, சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை, நவம்பர் 13க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.