UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:33 PM
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில் சீட் பெற்றவர்கள், வரும் 5ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேராவிட்டால், அவை காலியிடங்களாக அறிவிக்கப்படும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கான பொது கவுன்சிலிங், tnmedicalselection.net/ என்ற இணையம் வழியாக நடந்தது.
இதில், அரசு ஒதுக்கீட்டில் 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 13,417 பேரும் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். அவர்களின் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இட ஒதுக்கீடு ஆணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 5ம் தேதி பகல் 12:00 மணிக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் மாணவர்கள் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு சேராத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.