9 பள்ளியை மூட முடிவு! ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?
9 பள்ளியை மூட முடிவு! ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?
UPDATED : ஜூலை 07, 2026 06:23 PM
ADDED : ஜூலை 07, 2026 06:24 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாத, 9 அரசு பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் மூடும் நிலை உருவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 144 அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 10க்கும் குறைவாக உள்ளது. இது தவிர, ஒரு மாணவர் கூட இல்லாமல், 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாமல், 7 பள்ளிகளும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 2 பள்ளிகளும் உள்ளன.
வேலை தேடி பெற்றோர் வெளியூர் செல்வது, இடம்பெயர்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகர்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது.
குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட மூலனுார் - 37, குண்டடம் - 31, தாராபுரம் - 26, வெள்ளகோவில் - 15, மடத்துக்குளம் - 7, உடுமலை - 6, குடிமங்கலம் - 4 என மொத்தம், 126 பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, பத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதே நேரம், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், அவிநாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம், பொங்கலுாரில் ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆகிய இரண்டிலும், ஒரு மாணவர் கூட நடப்பு கல்வியாண்டில் சேரவில்லை.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. அப்பகுதியில் வசித்த குடும்பங்களின் குழந்தைகள் தொடக்கக் கல்வியை முடித்து வெளியூர் சென்றுவிட்டனர்.
பள்ளி வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புறத்திலுள்ள சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதுபோன்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
