UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:41 PM
சப்தர்ஜங் என்க்ளேவ்:
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை 200 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பிரிவுகளுடன் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. இங்கு தினமும் 7,000க்கும் அதிகமான நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் வருகின்றனர். தவிர 500க்கும் அதிகமான நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகின்றனர்.
நுாற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இங்கு பணியாற்றுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ரயில் அல்லது அரசு பேருந்துகளில் வருகின்றனர். பேருந்து அல்லது ரயில் நிறுத்தத்தில் இருந்து மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு இவர்கள் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். அல்லது பெரும்பாலும் நடந்தே செல்ல வேண்டியுள்ளது.
இவர்களின் வசதிக்காக பேருந்து, ரயில் நிறுத்தத்தில் இருந்து மருத்துவமனை வளாகத்திற்குள் இயங்க மின்சார பேருந்துகளை இயக்க எய்ம்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்த பேருந்துகள் ஏ.சி., வசதியுடன் 20 இருக்கைகள், சக்கர நாற்காலி ஏற்றி இறக்கும் வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ்., உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும் என, எய்ம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் வார நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் விடுமுறை நாட்களில் 15 நிமிட இடைவெளியிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் மின்சார பேருந்து இயக்கத்திற்காக பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நோயாளிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் அதற்கான பொத்தானை அழுத்தினால், பேருந்து ஓட்டுனர் நிறுத்தி உதவுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிய கட்டண சேவையில் இந்த பேருந்து சேவை கிடைக்கும். கட்டணம் பணமாக வசூலிக்கப்படாது.