18,000 அங்கன்வாடிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு
18,000 அங்கன்வாடிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:40 PM
பெலகாவி:
கர்நாடகாவில், 250 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கி உள்ளோம். வரும் நாட்களில், 18,000 அங்கன்வாடி மையங்களிலும் இந்த வகுப்புகளை துவக்க தயாராகி வருகிறோம், என பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
பெலகாவி ரூரல் தொகுதியில் நியமிக்கப்பட்ட 43 அங்கன்வாடி உதவியாளர்கள், ஆறு பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை, நேற்று அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
மாநிலமும், நாடும் வளர்ச்சி அடையும் வகையில், அங்கன்வாடி மையங்களை மாற்றுகிறோம். அங்கன்வாடி மையங்கள் மூலம் நல்ல குடிமகன்களை உருவாக்குவோம்.
தற்போது தனியார் பள்ளிகள், நர்சரியில் குழந்தைகளை சேர்க்க, 50,000 ரூபாய் கேட்கின்றனர். நாங்கள் ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. தற்போது 250 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கி உள்ளோம். வரும் நாட்களில், 18,000 அங்கன்வாடி மையங்களிலும் இந்த வகுப்புகளை துவக்க தயாராகி வருகிறோம்.
மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவில், ஏழை கிராமப்புற விவசாயிகளின் குழந்தைகளுக்கு சத்தான உணவுடன் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், 1974ல், அங்கன்வாடிகளை இந்திரா நிறுவினார். நடப்பாண்டு 50 ஆண்டு அங்கன்வாடிகள் பொன்விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல ஆண்டுகளாக அங்கன்வாடி என்று இருந்த பெயரை, அரசு நர்சரி என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அங்கன்வாடிகளில் பணியாற்றுபவர்கள், தங்கள் சொந்த பிள்ளைகளை போன்று மாணவர்களை வளர்த்து, நன்றாக படிக்க வைக்க வேண்டும்.
தற்போது அங்கன்வாடிகளில் பணிபுரிபவர்களுக்கு பி.யு.சி., படித்திருக்க வேண்டும் என்று அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே அங்கன்வாடிகளில் எம்.ஏ., பி.ஏ., இ.டி., படித்தவர்களும் ஆசிரியைகளாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.