UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 09:31 AM
சென்னை:
'புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஓய்வு பெறும் வயதை நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட, அயல் பணியை திரும்பப் பெற' உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு, புதிதாக 15 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. இக்கல்லுாரிகளுக்கு, ஒரு கல்லுாரிக்கு 12 பேராசிரியர்கள் வீதம், 180 பேராசிரியர்கள் நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்தது.
ஆனால், புதிய உதவி பேராசிரியர்கள் தேர்வு நடவடிக்கை முடங்கி கிடப்பதால், அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், அயல் பணியாக புதிய கல்லுாரிகளில் பணி அமர்த்தப்பட்டனர். இதற்கு, பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே, அயல் பணியில் சென்றவர்கள், ஓய்வு பெறும் வயதை நெருங்குவோர் போன்றோரை, தொடர்ந்து அயல் பணியில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடர்ந்து, புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், அயல் பணியில் ஈடுபடுத்தப் பட்ட பேராசிரியர்களில், ஓய்வு பெறும் வயதை நெருங்குவோரை, மீண்டும் அவர்கள் பணியாற்றிய கல்லுாரிகளுக்கே மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.