அரசு பள்ளியில் உதயசூரியன் 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர்
அரசு பள்ளியில் உதயசூரியன் 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர்
UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 09:30 AM
துாத்துக்குடி:
அரசு பள்ளியில் உதயசூரியன் சின்னத்துடன் கூடிய 'கேக்' வெட்டி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று 73வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., வினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து, ஆத்துார் மற்றும் ஆறுமுகனேரியில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த விழாவில் அவர் பங்கேற்றார்.
வாழ்த்து பாடல் ஆத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனிதா ராதாகிருஷ்ணனை மாணவ - மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்றனர். அங்கு, அவரது உருவம் பொறித்த கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
பின்னர், ஆறுமுகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவர், அங்கு தி.மு.க., கொடி வண்ணத்தில், உதயசூரியன் சின்னம் பொறித்த கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பள்ளி மாணவியர், பிறந்த நாள் வாழ்த்து பாட்டு பாடி, வாழ்த்தினர்.
மாணவியர், ஆசிரியைகள் முன்னிலையில் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அங்கிருந்த மாணவியருக்கு கேக் ஊட்டினார்.
அரசு மகளிர் பள்ளியில் கட்சி கொடி மற்றும் சின்னத்துடன் கூடிய கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சரின் நடவடிக்கையை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடவடிக்கை இது குறித்து, துாத்துக்குடி அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
அமைச்சர் பிறந்த நாளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர். அமைச்சருடைய பிறந்த நாளுக்காக, அரசு பள்ளிகளில் அவருடைய உருவம் பொறித்த கேக்கையும், தி.மு.க., சின்னமான உதய சூரியன் வரையப்பட்ட கேக்கையும் வெட்டுவது என்பது ஆணவத்தின் உச்சம்.
அதை ஏற்பாடு செய்ததோடு, அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிகளின் நிர்வாகத்தையும் குறை சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
அமைச்சர் தன் இஷ்டத்துக்கு நடந்ததற்கு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ - மாணவியரிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.