UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 02:36 AM

சென்னை:
பட்டய படிப்பை ஆங்கில வழியாக படித்து, பட்ட படிப்பையும், பிளஸ் 2 வரையும் தமிழ் வழியில் படித்தவர்களை, உதவிப் பொறியாளர் பணிக்கு பரிசீலிக்க தகுதி உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவி பொறியாளர்கள் பணிக்கு, கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு, காலியிடங்களில், 20 சதவீதம் ஒதுக்கப்பட்டது.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற 5 பேரை, தேர்வாணையம் பரிசீலிக்கவில்லை. பட்டய படிப்பில் இவர்கள் ஆங்கில வழி கல்வி பயின்றதால், தமிழ் வழி கல்வி படித்ததற்கான சான்றிதழை சமர்பிக்க முடியவில்லை.
5 பேரும் மனு தாக்கல்
எனவே, தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தங்களை உதவி பொறியாளர்களாக நியமிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட 5 பேரும் மனுக்கள்தாக்கல் செய்தனர்.
அவர்கள் சார்பில், வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, பிளஸ் 2 வரை, மனுதாரர்கள் தமிழ் வழி கல்வி படித்துள்ளனர்; பட்டய படிப்பில் மட்டுமே ஆங்கில வழி கல்வி படித்துள்ளனர். பொறியியல் பட்ட படிப்பும், தமிழ் வழியில் படித்துள்ளனர். எனவே, தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் பரிசீலிக்க வேண்டும், என்றார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடர்ந்தவர்கள், பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வி படித்துள்ளனர். பொறியியல் பட்ட படிப்பும், தமிழ் வழியில் படித்துள்ளனர். தொழில்நுட்ப கல்வித்துறையின் சுற்றறிக்கையை பார்க்கும்போது, கடந்த ஆண்டு வரை, பட்டய படிப்பை தமிழ் வழியில் படிக்க முகாந்திரம் இல்லை. அதனால், பட்டய படிப்பை நடத்தும் நிறுவனங்கள், தமிழ் வழியில் கல்வி போதிக்கவில்லை.
மறுக்கக் கூடாது
பொறியியல் பட்ட படிப்பில், பட்டய படிப்பை முடித்தவர்கள், லேட்ரல் என்ட்ரி வாயிலாக சேர்ந்துள்ளனர். உதவி பொறியாளர்கள் பணிக்கு, கல்வித் தகுதியாக பட்ட படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனால், தமிழில் பிளஸ் 2 மற்றும் பட்ட படிப்பு படித்திருந்தால் போதுமானது. மனுதாரர்கள், இந்த தகுதியை பூர்த்தி செய்துள்ளனர். பட்டய படிப்பில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற முடியவில்லை என்பதற்காக, அவர்களுக்கான வாய்ப்பை மறுக்கக் கூடாது.
மனுதாரர்கள், பட்டய படிப்புக்கான தேர்வுகளை தமிழில் தான் எழுதி உள்ளனர். ஆனால், தமிழ் வழியில் பட்டய படிப்பு பயிற்றுவிக்கப்படாததால், அதற்கான சான்றிதழை அவர்களால் பெற முடியவில்லை.
எனவே, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் பரிசீலித்து, உதவி பொறியாளர்களாக நியமிக்கப்பட, மனுதாரர்களுக்கு தகுதி உள்ளது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.